உலக செய்திகள்

மாலத்தீவில் உச்ச கட்ட அரசியல் குழப்பம்: முன்னாள் அதிபர் கயூம், தலைமை நீதிபதி அலி ஹமீத் கைது

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அதிபர் கயூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலி ஹமீத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Maldives

மாலி,

மாலத்தீவில் அதிபராக அப்துல்லா யாமீன் உள்ளார். அவருடைய அரசுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும் அவர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து ஆட்சி கவிழும் அபாயத்தை தவிர்க்க 12 எம்.பி.க்களை அப்துல்லா யாமீன் தகுதி நீக்கம் செய்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிருப்தியாளர்கள், எதிர்க்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனிடையே 12 எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடன உத்தரவை பிறப்பித்தார். இதனை அவருடைய அரசியல் ஆலோசகர் அஜிமா சுக்கூர் நேற்று அறிவித்தார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், 12 எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அலி ஹமீத் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் அப்துல்லா யாமீன் உத்தரவின் பேரில் தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபரின் இந்த நடவடிக்கை மிகவும் இழிவானது என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதி அலி ஹமீது கைது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள மாலத்தீவு போலீஸ், கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதியிடம் விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயாமும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கயாம் தற்போதைய அதிபர் யாமீனின் சகோதர் ஆவார். 30 ஆண்டு காலம் மாலத்தீவை ஆட்சி செய்த மமூன் அப்துல் கயூம், தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மாலத்தீவு சுப்ரீம் கோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதில் விடுவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் கயூமின் மகன் பரிசூம் அடங்குவார்.