உலக செய்திகள்

மாலத்தீவு : தேர்தல் முடிவை எதிர்த்த அதிபரின் மனு மீதான விசாரணை துவக்கம்

மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் அப்துல்லா யாமீன், தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

மாலே,

மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது யாமீனும் இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.

எனினும், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் விதமாக, அதிபர் யாமீனை எதிர்த்து, எதிர்க் கட்சிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, அதிகம் அறியப்படாத இப்ராஹிம் முகமது சோலீ அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இருப்பினும், பதவியில் தொடர்ந்து நீடிக்க அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதிபர் தேர்தலில், ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எனவே அந்தத் தேர்தல் முடிவுகளை செல்லாததாக அறிவிக்கும்படி கோரி யாரும் எதிர்பாராத வகையில் உச்ச நீதிமன்றத்தில் அதிபர் யாமீன் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதன் மீதான விசாரணை அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், யாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.