கொழும்பு,
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐநாவிற்கு மாலத்தீவு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. #MaldivesCrisis
இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவு நாட்டில் இப்போது எழுந்து உள்ள அரசியல் நெருக்கடி நிலையை சரிசெய்வதில் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய அப்துல்லா யாமீன் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய ஐ.நா.விற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்துக் கட்சிகளை கூட்டி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்குமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸிடம் எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன.
மாலத்தீவு நாட்டில் இப்போது நேரிட்டு உள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள தயார் என ஐ.நா. கூறியதை அடுத்து மாலத்தீவு எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்த கோரிக்கையானது முன்வைக்கப்பட்டு உள்ளது.
அப்துல்லா யாமீன் அரசு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ள விவகாரத்தில் கவலையை தெரிவித்து உள்ள எதிர்க்கட்சிகள், சர்வதேச அளவிலான கண்டனத்தில் இருந்து தப்பிக்க இந்தஒரு நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக குற்றம் சாட்டி உள்ளன. பிரச்சனை தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை என்பதை முன்னெடுக்க அரசு முதலில் ஜனநாயகம், சட்டம் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகளை விடுவிக்க வேண்டும். மாலத்தீவு பாராளுமன்றத்தில் இருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், பாராளுமன்றம் வழக்கம்போல செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது