ஸ்டாக்ஹோம்,
உலகில் மனிதன் உட்பட பல்வேறு பாலூட்டி இனங்கள் நிலத்தில் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர நீரில் வாழும் பாலூட்டிகளும் உள்ளன. இதுபற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 500க்கும் கூடுதலான பாலூட்டி இனங்கள் அழிய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான, சுவீடன் நாட்டின் கோதென்பர்க் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேனியல் சில்வெஸ்டிரோ என்பவர் கூறும்பொழுது, கடந்த 1,26,000 ஆண்டுகளில் பருவநிலை மாறுபாடுகளால் உயிரினங்கள் அழிந்ததற்கான தேவையான சான்றுகள் கிடைக்கவில்லை.
ஆனால் அதற்கு பதிலாக, இந்த காலகட்டத்தில் 96% பாலூட்டிகள் அழிந்து போனதற்கு மனிதர்களின் தாக்கமே காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
அந்த ஆய்வில், மனிதர்களால் ஏற்பட்ட பருவநிலை மாறுபாடு மற்றும் மனிதர் தொடர்புடைய பிற அச்சுறுத்தல்களால் பல்வேறு இனங்களுக்கு பேராபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் உயிரினங்களின் அழிவுக்கு பின்னணியில் ஐஸ் ஏஜ் எனப்படும் பனிக்கால சுழற்சிகள் தொடர்புடைய பெரிய அளவிலான பருவநிலை மாறுபாடுகள் இருக்க கூடும் என பிற நிபுணர்கள் நம்புகின்றனர்.