மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்ட ஆண்ட்ரெஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடார் (வயது 65) அமோக வெற்றி பெற்றார்.
மெக்சிகோ சிட்டியில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் அவர் அந்த நாட்டின் அதிபராக முறைப்படி பதவி ஏற்றார். இந்த விழாவில் பதவிக்காலம் முடிந்து வெளியேறியுள்ள அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கலந்துகொண்டார்.
புதிய அதிபராக பதவி ஏற்றதும், லோபெஸ் ஓப்ரடார் மெக்சிகோவில் பொது வாழ்விலும், தனி வாழ்விலும் இழிவான ஊழலை ஒழிக்கப்போராடப்போவதாக சபதம் செய்தார்.
ஊழல்தான் நாட்டின் பேரழிவு, மெக்சிகோ முன்னேற வேண்டுமானால் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் பணத்தை எடுத்துக்கொள்ள யாரும் தனது பதவியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, அனைத்து தரப்பு மக்களுடனும், உலக நாடுகளின் அரசுகளுடனும் மெக்சிகோ நல்லுறவைப் பராமரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மிக முக்கிய அம்சம், அவர் அதிபருக்கான சம்பளத்தில் 60 சதவீதத்தை குறைத்துக்கொள்ளவும், அதிபர் மாளிகையில் வசிக்கப்போவதில்லை என்றும், அதிபருக்கான விமானத்தை விற்று நாட்டுக்கு சேர்த்துவிட எண்ணி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.