சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி விபரீதம் முடியும் முன்பே பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார் இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், காமக்கொடூரர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில் தான் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறதே தவிர உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ, அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கையும் அ.தி.மு.க அரசு சில காரணங்களுக்காக மிகவும் பொறுப்பற்ற முறையில் காலம் தாழ்த்தி அலட்சியமாக நடத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மன்னிக்க முடியாத துரோகம்
பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றம் சாட்டப்பட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களையோ, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளையோ மாவட்டக் காவல்துறையும் விசாரிக்கவில்லை. பிறகு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் பொள்ளாச்சி வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.
முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்.
கடும் நடவடிக்கை
பொள்ளாச்சி விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், தங்களின் கண்ணியத்திற்கு ஆபத்து என்ற உணர்வு ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கே ஏற்பட்டுள்ளது. பெண்களை பயத்திலும், பதற்றத்திலும் வைத்திருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல. தான் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.
மே 23-ந் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும். இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.