உலக செய்திகள்

ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு - அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை

ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷிய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தினத்தந்தி

பீஜிங்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு அந்த நாடுகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 28, 29-ந்தேதிகளில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது இந்தியா, சீனா, ரஷியா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை துணை மந்திரி ஜிங் ஜுன் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

சீன அதிபர் ஜின்பிங் ஜி-20 மாநாட்டுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் வர்த்தக கொள்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஏற்கனவே பிஷ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் உலக வர்த்தகம் தொடர்பாக சந்தித்து பேசி உள்ளனர்.

அதை தொடர்ந்து தற்போது ஜி-20 மாநாட்டின் இடையே 3 நாடுகளின் தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச இருப்பது தற்போது நிலவும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அமெரிக்கா தன்னுடைய வர்த்தக கூட்டணி நாடுகளை நடத்தும் முறை உலக வர்த்தகம், முதலீடு, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே 3 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில், அமெரிக்காவின் ஒருசார்பு வர்த்தக கொள்கை, வர்த்தக ரீதியான நெருக்கடி மட்டுமின்றி, 3 நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு