ஷியாமென் (சீனா)
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று சீனாவுக்கு சென்றார்.
பிரிக்ஸ் மாநாடு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 8-வது மாநாடு கடந்த ஆண்டு இந்தியாவின் கோவா நகரில் நடந்தது.
அதனை தொடர்ந்து தற்போது 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை களைந்து, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு மூலம் ஒருவர் மற்றவரின் கவலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மோடி நம்பிக்கை
நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று சீனாவுக்கு சென்றார். மாநாடு நடைபெறும் ஷியாமென் நகருக்கு சென்ற அவரை அங்கு வாழும் இந்தியர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
முன்னதாக, இந்த மாநாடு பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தும் என உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
சீனாவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளும், நேர்மறையான விளைவுகளையும் எதிர்பார்க்கிறேன். அவை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாண்மையை பலப்படுத்த உதவும். மேலும் கோவா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும் எனவும் நம்புகிறேன்.
இந்தியா முக்கியத்துவம்
பிரிக்ஸ் அமைப்பானது உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா எப்பொதும் அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.
இந்த பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஜின்பிங்குடன் சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே 70 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் தற்போது தணிந்து இருக்கும் நிலையில், மோடி-ஜின்பிங் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது இருநாட்டு அரசியல் நோக்கர்களிடமும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் பயணம்
சீனாவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மியான்மர் செல்கிறார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் யூ தின் கியா மற்றும் சிறப்பு ஆலோசகர் ஆங்சான் சூகி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், இருநாடுகளுக்கு இடையோன உறவை பலப்படுத்த பல்வேறு திட்டங்கள் வரையறுக்கப்படும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.