மாஸ்கோ,
ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக மோடி நேற்று ரஷியா சென்றுள்ளார்.
மோடியை ரஷிய அதிபர் புதின் சந்தித்தார். தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமதுவை சந்தித்தார். அப்போது மத போதகர் ஜாகீர் நாயக் பிரச்சினையை எழுப்பினார், மேலும் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார்.
இது குறித்து வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கூறியதாவது:-
"பிரதமர் மோடி ஜாகீர் நாயக்கின் பிரச்சினையை எழுப்பினார், அது தொடர்பாக அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என்று இரு தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர். இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றொரு முக்கிய விஷமாகும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பதன் பின்னணியில் உள்ள ஆளுகை மற்றும் சமூக-பொருளாதார மாற்றம் குறித்து மலேசிய பிரதமரிடம் இந்திய பிரதமர் எடுத்துரைத்து உள்ளார்.
பயங்கரவாதம் ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் மலேசியாவுக்கு எதிரானது என்றும் மகாதீர் ஒப்புக் கொண்டார் என கூறினார்.