21 குண்டுகள் முழங்க வரவேற்பு
எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபி அகமது அரசு முறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அபுதாபி விமான நிலையம் வந்தடைந்த அவரை பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கனிவுடன் வரவேற்றார்.
இதனையடுத்து கசர் அல் வதன் அரண்மனைக்கு வந்த எத்தியோப்பியா பிரதமருக்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமீரக மற்றும் எத்தியோப்பியா நாட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
ஒத்துழைப்பை அதிகரிக்க...
இது குறித்து அபுதாபி பட்டத்து இளவரசர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எத்தியோப்பியா நாட்டின் பிரதமரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சந்திப்பானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும். பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்தும், ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பேசப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.