சந்திப்பு
சுகாதார நிறுவன பொதுச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் நேற்று அபுதாபியில் உள்ள கடற்கரை அரண்மனைக்கு வந்தார். அவரை அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார். பின்னர் இருவரும் சந்தித்து பேசினர்.
குறிப்பாக அமீரகத்தில் உள்ள சுகாதார அமைப்புகள், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்து வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. மேலும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட முக்கிய பங்காற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பாராட்டுக்குரியது
தொடர்ந்து உலக சுகாதார நிறுவன பொதுச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் பேசியதாவது:-
உலக சுகாதார நிறுவனம் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கொரோனா பரவலை தடுக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பல்வேறு வகைகளிலும் பல நாடுகளுக்கு மனிதாபிமான வகையில் உதவியதற்கு அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ஏழை நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அவர் ஏராளமாக வழங்கியுள்ளார்.
இதேபோல் பாகிஸ்தான் நாட்டில் போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.
உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் அதிக அளவில் ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அமீரகம் கொரோனா பரவலை தடுப்பதில் முக்கியமான நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உதவிகள் வழங்கும்
அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கூறுகையில், உலக சுகாதார நிறுவனம் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க அமீரகம் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும். அமீரகத்தில் கொடிய வைரசான கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசியை போட்டுள்ளனர் என்றார்.
இந்த சந்திப்பின் போது அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.