மாஸ்கோ,
வடகொரியா நாடு அணு ஆயுத சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபை வடகொரியா மீது பொருளாதார தடையும் விதித்தது.
ஆனால் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் மூளும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு பின் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகள் இடையே முதல் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
வடகொரியா நாட்டின் அதிகாரிகள் அடங்கிய குழு தலைவர் ரி சன் குவான் மற்றும் தென்கொரிய நாட்டின் அதிகாரிகள் அடங்கிய குழுவின் தலைவர் சோ மியங் கியான் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ராணுவ பதற்றம் நிறைந்த சூழ்நிலை மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகியன இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன என கூறப்படுகிறது.
இந்த நிலையில், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையை ரஷ்யா வரவேற்றுள்ளது. இதுபற்றி ரஷ்ய அரசின் செய்தி தொடர்பு அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இரு நாடுகள் இடையேயான இந்த பேச்சுவார்த்தை சரியானது. இது தேவையானது என்று நாங்கள் கூறி வந்தோம் என கூறியுள்ளார்.
#NorthKorea | #SouthKorea