மாபுட்டோ,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக். இந்த நாட்டில் அதிரடியாக 6 மந்திரிகளை பதவியை விட்டு நீக்கி அதிபர் பிலிப் நியூசி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட மந்திரிகளில் அட்ரியானோ அபோன்சோ மலேயன் (நிதி), எர்னஸ்டோ மேக்ஸ் எலியாஸ் டோனேலா (கனிம வளங்கள்) உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள்.
இந்த 6 மந்திரிகள் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பது பற்றி அதிபர் பிலிப் நியூசி வாய் திறக்கவில்லை.
மந்திரிகள் பதவி நீக்கம்பற்றி அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அதிபர் 6 மந்திரிகளை பதவி நீக்கம் செய்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.
புதிய மந்திரிகள் நியமனம் பற்றி எந்த தகவலும்வெளியிடப்படவில்லை. இந்த பதவி நீக்கம் அதிர்ச்சி அளிக்கவில்லை என்று அந்த நாட்டின் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் ஒரே நேரத்தில் மூத்த மந்திரிகள் உள்பட 6 பேரை அதிபர் நீக்கி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர்மாதம் அதிபர் பிலிப் நியூசி, ராணுவம் மற்றும் உள்துறை மந்திரிகளை மாற்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.