உலக செய்திகள்

மியான்மர்; ஆங் சான் சூகிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து கோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது.

தினத்தந்தி

நேபிடாவ்,

மியான்மரில் நடைபெற்று வந்த ராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்து மக்களுக்காக போராடியவர் ஆங் சான் சூகி. 'பர்மாவின் காந்தி' என்று உலக நாடுகளால் அழைக்கப்படுபவர். இவருக்கு 1991ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும், இவருக்கு 1992ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு விருதினை வழங்கி இந்தியாவின் சார்பில் கவுரவிக்கப்பட்டது.

மாபெரும் மக்கள் தலைவராக கருதப்படும் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மர் நாட்டு ராணுவ கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆங் சான் சூகி, கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்றும் கொரோனா விதிகளை மீறி உள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் அவர் மறுத்துள்ளார்.

யார் இந்த ஆங் சான் சூகி?

மியான்மரின் முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரின் மகளான ஆங் சான் சூகி கடந்த 1988-ம் ஆண்டு அப்போதைய ராணுவ ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை தொடங்கினார். இதில் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. இதனால் சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

ஒருவழியாக சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ராணுவம், கடந்த 2005-ம் ஆண்டு ஆங் சான் சூகியை விடுவித்தது. வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தில் நோபல் பரிசு, மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது, நேரு விருது, மகசேசே விருது, கனடாவின் கவுரவக் குடிமகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார் ஆங் சான் சூகி.

இத்தகைய செல்வாக்குகளால் 2015-ல் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி 80 சதவீதம் இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

எனினும் ஆங் சான் சூகி மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ், அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி பொறுப்பேற்றார்.

இதற்கிடையில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்பிரச்சினை தலைதூக்கியது. ஜனநாயகத்திற்காக போராடிய சூகி, ராணுவத்தை ஏவி ரோஹிங்கியா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் முன் விசாரணைக்கும் ஆஜரானார் சூகி. இதனால் அவருக்கு இருந்த ஜனநாயக பிம்பம் சிதைந்து போனது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி கவிழ்ப்பு:-

இந்த நிலையில், கடந்த ஆண்டு மியான்மரில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக அந்த நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியது. ராணுவ தலைவர்கள் அரசுக்கு எதிராகவும், தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மியான்மர் ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அதோடு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 15-க்கும் மேற்பட்ட மூத்த அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்தது. மேலும் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசர நிலையை ராணுவம் பிரகனடப்படுத்தியது. கைது செய்யப்பட்ட நாள் முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர். ஆனால் ராணுவம் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. 1,300-க்கும் அதிகமான மக்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வழக்கு விசாரணை:-

76 வயதான ஆங் சான் சூகியின் மீது ஊழல் வழக்குகள், அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது; கொரோனா தடுப்பு விதிகளை மீறியது என்பன உள்பட மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகள் மீது கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது. இதில் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியது தொடர்பான 2 வழக்குகளின் விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.

இதில் ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட்டு அவரை குற்றவாளியாக அறிவித்தது.

100 ஆண்டுகள் சிறை:-

இந்த 2 வழக்குகளில் மியான்மர் ராணுவ கோர்ட்டு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. 2 வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் வீதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

எனினும் இந்த தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்கு அனுப்பப்படுவாரா அல்லது வீட்டு சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை. அதேபோல் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

அனைத்து வழக்குகளிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஆங் சான் சூகியை 104 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. அவர் சிறையில் வைத்து மரணம் அடைவதை அவர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

ராணுவ ஆட்சிக்குழுவால் கைது செய்யப்பட்ட 10,600க்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகியும் ஒருவர் ஆவார். ஜனநாயகத்திற்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை மியான்மர் இராணுவம் ஒடுக்கியது என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகியுடன் சேர்த்து மியான்மரின் முன்னாள் அதிபரும், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியில் இருந்தவருமான வின் மைண்ட்க்கும் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆங் சான் சூகி மற்றும் முன்னாள் அதிபர் வின் மைண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து கோர்ட்டு புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தது.

உலக நாடுகள் கண்டனம்:-

ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோபல் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

மலேசிய சட்டமன்ற உறுப்பினரும் மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான சார்லஸ் சாண்டியாகொ, நீதிக்கு எதிராக நடைபெறும் கேலிக்கூத்து இது என்று கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை