மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் எண்ணிக்கை அதிகம். அவர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் சுட்டு கொல்வதுடன், தங்களுக்கு எதிராக நடக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை.
சர்வதேச அளவில் போதை பொருட்களை கடத்தும் நாடுகளின் வரிசையில் ஒன்றாக மெக்சிகோ நாடு உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மர்ம கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.
லானோ கிராண்ட் மாவட்டத்தின் கோட்டெபெக் ஹரினாஸ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 8 அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர மெக்சிகோ மாநில வழக்கறிஞர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை, மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு படை, ராணுவம், கடற்படை மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆகியவை கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென இதுவரை தெரிய வரவில்லை.