வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு தொடுத்து உள்ளார். இது தொடர்பாக 28 பக்க மனு ஒன்றை அவரது வக்கீல் தாக்கல் செய்து இருக்கிறார்.
வழக்கில் கூறி இருப்பதாவது:
அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர், டிரம்ப். அவருக்கும் எனக்கும் செக்ஸ் உறவு இருந்தது. இந்த உறவானது, 2006ம் ஆண்டு லேக் டோஹோவில் தொடங்கியது. 2007ம் ஆண்டு வரை தொடர்ந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் பேவர்லி ஹில்ஸ் பங்களாவில் டிரம்புடன் நடந்த ஒரு சந்திப்புடன் பல்வேறு விஷயங்களுடன் இதுவும் (செக்ஸ் உறவு) நடந்தது.
இந்த விவகாரங்களை ஜனாதிபதி தேர்தலின்போது நான் எழுப்பக்கூடாது என்று என் வாயை அடைப்பதற்காக டிரம்பின் சொந்த வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.84 லட்சத்து 50 ஆயிரம்) பணம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் என்னுடன் வலுக்கட்டாயமாக ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த நடிகை, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் டிரம்ப் மீது பாலியல் ரீதியில் பகிரங்கமாக குற்றம் சாட்டுவதை தடுப்பதற்காக அவசர அவசரமாக இந்த ஒப்பந்தம் போட்டு, பணம் வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.