உலக செய்திகள்

நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக டிராகன் 2 விண்கலத்தை உருவாக்கியது.

கடந்த மே மாதம் 31-ந் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள் டிராகன் 2 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 2 மாத காலமாக தங்கி ஆய்வு மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்கள் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் தங்கள் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு கடந்த 1-ந் தேதி டிராகன் 2 விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டனர். விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்ற இவர்களின் வருகை அறிவியல் உலகில் முக்கிய கவனம் பெற்றது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 19 மணி நேர பயணத்துக்கு பின் மெக்சிகோ வளைகுடாவில் உள்ள பென்சாகொலா கடலில் பாராசூட் மூலம் டிராகன் 2 விண்கலம் வெற்றிகரமாக நீரில் இறங்கியது.

அதன் பின்னர் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் கப்பல் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமி வரையிலான அவர்களின் பயணத்தை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக கவனித்து வந்தன. பூமிக்கு வந்திறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் 45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷ் டவுன் என்று சொல்லப்படும் தண்ணீரில் விண்கலம் தரையிறங்குவதை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது