இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியாமுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வந்ததாக தகவல் வெளியாகியது. இதற்கிடையே நவாஸ் செரீப் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும், அவருடைய இதய செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிறைச்சாலை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிறையில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தார்கள்.
இப்போது அவருடைய உடல் நிலை மேலும் மோசம் அடையவே, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் தன்னுடைய மார்பு மிகவும் வலிக்கிறது என நவாஸ் செரீப் கூறியுள்ளார், இதனையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து பிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், அங்கு அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.