உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (வயது 68) மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு நாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்திருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இவ்வாறு பதவி இழந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் கடந்த செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை இஸ்லாமாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இந்த காலக்கெடுவுக்குள் விசாரணையை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு முடிக்கவில்லை. எனவே மேலும் 2 கட்டமாக மொத்தம் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த 9-ந் தேதிக்குள் விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். எனினும் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த விவகாரம் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப்பின் வக்கீல், மேலும் 6 வார அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், இந்த ஊழல் வழக்குகளின் விசாரணை அனைத்தையும் 1 மாதத்துக்குள் முடித்து இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் என தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், நாட்டு மக்களும் மனத்துயரில் இருந்து வெளியே வர வேண்டும் என விரும்புவதாக கூறிய நீதிபதிகள், நவாஸ் ஷெரீப் விரும்பினால் லண்டனில் நோயால் வாடும் தனது மனைவியை சந்திக்க செல்லலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். முன்னதாக இந்த வழக்குகளின் விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றுதான் நீதிபதிகள் கூறினர். ஆனால் அவசர கதியில் நீதி வழங்கக்கூடாது என நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் கேட்டுக்கொண்டதால், காலக்கெடுவை 1 மாதமாக நீதிபதிகள் நீட்டித்தனர்.

இந்த வழக்குகளில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான வாஜித் ஜியா மற்றும் 2 விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களே இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த காலக்கெடுவுக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க முடியாது என்றே கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த காலக்கெடு போதாது எனவும், கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி முகமது பஷிர் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்