காத்மாண்டு,
சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட) மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதேபோன்று இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து நேபாளத்தில் உள்ள திரையரங்குகள், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள், சுகாதார கிளப்புகள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் புத்துணர்வு செயல்களுக்கான பிற இடங்களையும் வருகிற ஏப்ரல் 30ந்தேதி வரை மூடும்படி நேபாள அரசு உத்தரவிட்டு உள்ளது.