உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; நேபாள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இடைநீக்கம்!

நேபாளத்தின் ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இன்று பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், தலைமை நீதிபதி சோளேந்திர ஷம்ஷர் ஜேபி ராணாவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நேபாளத்தின் ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 11 மணிக்கு இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி திலேந்திர பிரசாத் படு, நேபாளி காங்கிரஸ் கட்சியின் புஷ்பா பூஷல், சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தேவ் குருங் மற்றும் சிபிஎன்-ஐக்கிய சோசலிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் ராம் பண்டாரி உள்ளிட்ட ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்தவுடன்,குற்றம் சாட்டப்பட்டவருடைய பதவி தானாகவே இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால் அவர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் ஜனவரி 2, 2019 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க முடியவில்லை உள்ளிட்டவை குற்றச்சாட்டுகளில் அடங்கும். மேலும், தலைமை நீதிபதியின் உறவினர் ஒருவர் கேபினட் அமைச்சரவையில் மந்திரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து அவருக்கு எதிராக நேபாள வழக்கறிஞர்கள் சங்கம் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியது.

இதனையடுத்து, இந்த பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவ் குருங், நீதிமன்றம் சரியாகச் செயல்படாததாலும், தலைமை நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாலும் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது என்று கூறினார்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தலைமை நீதிபதி தனது பதவியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவார்.

இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீப்குமார் கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2017ல் இதேபோன்ற சம்பவத்தில், அப்போதைய தலைமை நீதிபதி சுசீலா கார்க்கிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டின் தடை உத்தரவு மூலம், கார்க்கி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை