டெல் அவிவ்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப் அரசின் முடிவை இஸ்ரேல் அரசு வரவேற்றுள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் கூறி உள்ளது.
இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார். லெபனான் மீது நடந்து வரும் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, இன்னும் தீவிரத்துடனும், துல்லியத்துடனும், மனவுறுதியுடனும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றார்.
எங்களுடைய செய்தி மிக தெளிவாக உள்ளது. இஸ்ரேல் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் தாக்குவோம் என்றார். பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே என இந்த தாக்குதலை நேரடியாக ராணுவ நடவடிக்கையுடன் தொடர்புபடுத்தி அவர் கூறினார். எப்போதெல்லாம் தேவையோ, அப்போது ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ராணுவம் தாக்கும்.
வடக்கு இஸ்ரேலின் குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை நாங்கள் முற்றிலும் மீட்டெடுக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என்றார்.