வாஷிங்டன்
சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்பதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது. இன்றளவும் அதற்கு எதிராக உலகமே ஒன்றிணைந்து யுத்தம் நடத்தி வருகிறது.
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி உகானில் 2019 டிசம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்குத் தெரிவித்தது.
கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, அதன் உகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக, அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கண்டறிந்துள்ளது.
சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) இன் மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அந்த ஆய்வகத்தில் இருந்த எத்தனை விஞ்ஞானிகள் பாதிக்கப்பட்டனர், தொற்று பரவிய நேரம் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க உளவுத் துறை புதிதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியே பரவியதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கொரோனா எப்படி பரவியது என உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா சீனாவில் இருந்து எப்படி பரவியது என்ற விசாரணையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஜனவரி மாதம் வெளியிட்ட வெளியுறவுத்துறை அறிக்கையில் 2019 இலையுதிர்காலத்தில் சீனா ஊகான் ஆராய்ச்சி கூட விஞ்ஞானிகள் நோய்வாய்ப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறும் அளவுக்கு செல்லவில்லை என கூறப்பட்டு இருந்தது.
தற்போதைய உளவுத்துறை அறிக்கை விலங்கு-மனித தொடர்புகளிலிருந்து இயற்கையாகவே கொரோனா தோன்றியது என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஆனால் உகான் நிறுவனத்தில் இருந்து தற்செயலாக கசிந்ததன் விளைவாக வைரஸ் ஏற்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை இது தடுக்கவில்லை.