ரோம்,
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதுவரை இத்தாலியில் மொத்தம் 7,60,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் புதிதாக 30,550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 39,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை இத்தாலி பிரதமர் குவிசெப் கான்ட்டே அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலங்களிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியின் அதிக மக்கள் தொகை கொண்ட லோம்பார்டி நகரத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் மக்கள் தங்களை இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.