உலக செய்திகள்

இங்கிலாந்து விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்கா நடவடிக்கை

இங்கிலாந்து நாட்டு விமான பயணிகள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை தங்களுடன் கொண்டுவர வேண்டுமென்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கடந்த வாரம் அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் இதுபற்றிய அறிவிப்பினை வெளியிட்டார். இந்த புதுவகை வைரசானது, முன்பிருந்த கொரோனா வைரசை விட மிக எளிதில் பரவுகிறது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மிக வேகமுடன் பரவி வருகிறது என்றும் கூறினார்.

இதனால் பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உள்ளது. இந்தியாவில், வருகிற 31ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள அமெரிக்கா புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, இங்கிலாந்தில் விமான பயணிகள் தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் முன் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை உடன் கொண்டு வரவேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்படும் முன், 3 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனை முடிவை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவு இன்று கையெழுத்திடப்பட்டு வருகிற திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பயண போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதனால், இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்கள் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டு விட்டன என்றும் அந்த மையம் தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு