உலக செய்திகள்

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா; 25 மாகாணங்களில் பரவல்

ஆனால், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இதற்கு, அந்த அளவுக்கு பெரிய பலனை தரவில்லை.

நியூயார்க்

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா விரைவாக உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. இதற்கு பிஏ.3.2 என பெயரிடப்பட்டு உள்ளது. சிகாடா என்றும் அழைக்கப்படும் இந்த வைரசானது விரைவாக பரவி வருவதுடன், விரைவாக உருமாற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால், இதனை தடுப்பதற்கான முயற்சிகள் உடனடி பலனை தரவில்லை.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் 25 மாகாணங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் விரைவாக பரவி அதிகரித்து காணப்படுகிறது என தெரிவிக்கின்றது.

2024-ம் ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் காணப்பட்ட இந்த தொற்று, 2025-ம் ஆண்டில் பரவலாக பரவியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் என 2021-ம் ஆண்டு பரவலாக காணப்பட்ட வைரசின் தொடர்ச்சியாக இது உள்ளது. இதன் புரதம் 70 முதல் 75 வகையான உருமாற்றங்களை பெற்றுள்ளது.

இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், இதனால் உடனடியான அச்சுறுத்தல் எதுவும் பெரிய அளவில் இல்லை என டாக்டர் ஒருவர் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இதற்கு, அந்த அளவுக்கு பெரிய பலனை தரவில்லை. ஏனெனில் அவை விரைவாக உருமாற்றம் அடைந்து பல்வேறு வடிவங்களை பெற்று விடுகின்றன என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்னர் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பல்வேறு அலைகளாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.