சியோல்,
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. அமைப்பு பொருளாதார தடையும் விதித்தது.
ஆனால் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு வருவதுடன் அமெரிக்காவின் மைய பகுதியை தாக்கும் வலிமையையும் வடகொரியா பெற்றுள்ளது என அந்நாடு கூறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் நடந்த உலக அளவிலான இணையதள தாக்குதல்களால் மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் முடங்கின. வடகொரியாவே இதனை நடத்தியது என அமெரிக்கா வெளிப்படையாக குற்றம் சாட்டியது.
இதற்கு வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அளித்துள்ள பதிலில், இணையதள தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதனை நாங்கள் பலமுறை தெளிவுப்படுத்தி வந்துள்ளோம். இதுபோன்ற அமெரிக்காவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்பது வடகொரியாவுக்கு எதிரான தீவிர அரசியல் தூண்டுதலாகும். இதனை நாங்கள் சகித்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.