உலக செய்திகள்

செலவின மசோதா நிறைவேறுவதில் சமரசம் இல்லை: அமெரிக்காவில் முக்கிய துறைகள் செயலிழப்பு - கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் முக்கிய அரசு துறைகள் முடங்கின. கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, மெக்சிகோவில் இருந்து யாரும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழையக்கூடாது; அதற்கு அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற மெக்சிகோவிடம் நிதி கேட்டார். அந்த நாடு தர மறுத்து விட்டதால் உள்நாட்டு நிதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் டிரம்ப் உள்ளார். அவர் உள்நாட்டு நிதி 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு. இதனால் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர முடியாது என அக்கட்சி கூறி விட்டது.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி குடியரசு கட்சி செலவின மசோதாவை நிறைவேற்றி விட்டது.

மத்திய அரசின் 15 துறைகளில் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் முடிந்த நிலையில், அந்த துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு செலவின மசோதா இரு சபைகளிலும் நிறைவேறியாக வேண்டும்.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய மசோதா, 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியாக வேண்டும். ஆனால் அந்த பலம் குடியரசு கட்சிக்கு இல்லை. 51 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற வேண்டிய நிலை உள்ளது. மெக்சிகோ எல்லைச்சுவர் திட்டம் கூடாது என்பதில் ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளதால், செலவின மசோதா நிறைவேறவில்லை.

இதன் காரணமாக 9 துறைகள் செயலிழந்துள்ளன.

இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் டிரம்ப் அரசுக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இதற்கிடையே செனட் சபையும் வியாழக்கிழமை வரை ஒத்தி போடப்பட்டுள்ளது.

எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அமெரிக்காவில் முக்கிய துறைகள் செயல்படாமல் முடங்கி இருப்பது தொடர்கிறது. இதுபற்றி செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சுக் ஸ்கூமர், மெக்சிகோ சுவர் திட்டத்தை கைவிடாவிட்டால், செலவின மசோதா இன்றல்ல, அடுத்த வாரம் அல்ல, அடுத்த ஆண்டு அல்ல, ஒருபோதும் நிறைவேறாது என கூறினார்.

மேலும அவர், ஜனாதிபதி அவர்களே, அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் சுவர் திட்டத்தை கைவிட்டாக வேண்டும். அமெரிக்க மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் சுரண்டப்படுவதில் செனட் சபைக்கு விருப்பம் இல்லை என்றார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு புளோரிடா மாகாணத்துக்கு செல்லவிருந்த பயணத்தை டிரம்ப் ரத்து செய்து விட்டார். அவர் வாஷிங்டனில்தான் உள்ளார்.

இந்த பிரச்சினையில் சமரச பேச்சு வார்த்தை தொடர்கிறது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகிறார். ஆனால் டிரம்போ, அரசு துறைகள் முடக்கம் நீண்ட காலம் தொடரலாம் என எச்சரித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்