மிங்கோரா,
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு பள்ளி கூடத்தில் இருந்து பேருந்து ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்த மலாலா யூசுப் என்ற மாணவி மீது தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று அவர் வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
இதில் காயமடைந்த மலாலா பின்னர் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பெண் கல்வியை வலியுறுத்தியதற்காக கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்த அவர் கடந்த வாரம் 23ந்தேதி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் தனது வீடு மற்றும் பள்ளி பருவங்களை நினைவு கூர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 29ந்தேதி மலாலா சொந்த நாட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான ஸ்வட் பள்ளத்தாக்கு நகருக்கு அவர் இன்று செல்கிறார். இதற்காக மிங்கோரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் அனைத்து சாலைகளும் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அவருக்கு அரசும், ராணுவமும் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
தலீபான் கட்டுக்குள் இருந்த ஸ்வட் நகரை கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் தன்வசப்படுத்தியது. ஆனால், ஒரு சில வாரங்களுக்கு முன் ராணுவத்தின் மீது நடந்த தாக்குதல்கள் உள்பட தலீபான் தீவிரவாதிகள் சில சமயங்களில் இந்நகரின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.