வாஷிங்டன்,
கொரியப்போருக்கு பின்னர் வடகொரியாவும், தென்கொரியாவும் பகை நாடுகளாக மாறிப்போயின. ஆனால் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இவ்விரு நாடுகளும் பகைமை மறந்து, நல்லுறவுக்கு அடித்தளம் போட்டு உள்ளன.
அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப்பேச முடிவானது.
எல்லையில் தென்கொரிய பகுதியில் அமைந்து உள்ள பன்முஞ்சோமில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டில் இவ்விரு தலைவர்களும் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் அன்னும், மூன் ஜே இன்னும் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றவும் உறுதி கொண்டிருப்பதாக அறிவித்தனர்.
இந்த உச்சி மாநாட்டை வடகொரிய அரசு ஊடகம் கே.சி.என்.ஏ. புகழ்ந்து தள்ளியது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, சமாதானம், வளம் ஆகியவற்றுக்கான புதிய சகாப்தத்தை தொடங்கி உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
மேலும், பேச்சுவார்த்தையின்போது வட-தென் கொரியாக்கள் இடையேயான உறவுகளை பலப்படுத்துதல், கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி காத்தல், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் பரஸ்பர விஷயங்களில் இரு தரப்பினரும் நேர்மையாகவும், திறந்த மனதுடனும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களை சந்தித்தார். அவர் வட, தென் கொரிய தலைவர்களின் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகொரியாவுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு நடத்தியதற்காக நான் தென்கொரியாவை பாராட்ட விரும்புகிறேன். கொரிய தீபகற்பத்தை முழுமையாக அணு ஆயுதம் இல்லாத பிரதேசம் ஆக்குவதற்கு உறுதி பூண்டிருப்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னாலும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னாலும் நாங்கள் ஊக்கம் அடைந்து உள்ளோம்.
வரும் வாரங்களில் கிம் ஜாங் அன்னை நான் சந்திக்க உள்ளேன். அதை நம்பிக்கையுடன் நாங்கள் எதிர்கொள்கிறோம். அது ஆக்கப்பூர்வமானதாக அமையும்.
எதிர்காலத்தில் கொரிய தீபகற்பம் முழுவதும் அமைதியும், வளமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இது இரு கொரியாக்களின் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் அவர்களது பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிநடத்தும்.
அமெரிக்காவை வடகொரியா மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது. வடகொரியாவுக்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.