கொல்கத்தா,
மியான்மரில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.
ஏற்கனவே ராகினேவில் இதுபோன்று முந்தைய காலகட்டங்களில் வன்முறை வெடித்த போது அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் இந்தியாவிலும் டெல்லி, உத்தரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் குடியேறி உள்ளனர். அவர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை தொடங்கிய நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்து உள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் அவர்களை திருப்பி அனுப்ப அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.
மியான்மரில் இருந்து ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வரிசையாக வங்கதேசம் வரும் நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்ற உளவுத்துறை எச்சரிக்கையை குறிப்பிட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. ஆனால் எங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா - மியான்மர் இடையேயான எல்லைப் பகுதி மட்டும் 1,643 கி.மீ. தூரம். மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களை ஒட்டிய பல சர்வதேச எல்லைப்பகுதிகள் வேலிகளற்றதாக உள்ளன. இந்த எல்லைகளில் 16 கி.மீ. தூரம் வரை உள்ளூர் இன மக்கள் விசா இன்றி பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி அகதிகள் இந்தியாவிற்குள் நுழைவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுடன் தொடர்பில் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகப்படுகிறது.
ரோகிங்கியா அகதிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. வங்க தேசத்தில் பெருமளவிலான ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைவது போன்று இந்தியாவிற்குள்ளும் அவர்கள் தஞ்சமடையக்கூடும் என இந்திய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகமும் எல்லை நிலவரத்தை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், மணிப்பூர் மாநிலம் மொராக்கில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் நுழையலாம் என நாங்கள் மிகவும் கவலைக்கொண்டு உள்ளோம், திரிபுரா எல்லையும் என குறிப்பிட்டு உள்ளார். மணிப்பூர் மாநிலம் கொராக் இரு நாடுகளுக்கும் வர்த்தக மையமாக விழங்குவது பெரும் சவாலாக உள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.
எல்லையில் ரோஹிங்யாக்கள் ஊருவிவிடலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் மாநில பாரதீய ஜனதா அரசு அங்கு இரண்டு போலீஸ் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. மணிப்பூரில் உள்ள எல்லையோரப் பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் ஜிரிபம் பகுதியில் உள்ள 1211 வீடுகளை சோதனையிட்டதில் 265 பேர் சந்தே கத்திற்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 107 பேர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 22 ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு நாடு கடத்த மத்திய அரசிற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். அசாமின் எல்லையோரப் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.