உலக செய்திகள்

கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ தேர்வு

கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். #CarlosAlvarado

சான் ஜோஸ்,

கோஸ்டாரிகா நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் சிட்டிசன்ஸ் ஆக்சன் கட்சி மற்றும் நேசனல் ரெஸ்டோரேசன் கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.

இதில் ஆளுங்கட்சி சார்பில் கார்லோஸ் ஆல்வாரேடோ (வயது 39) போட்டியிட்டார். அவரை எதிர்த்து பேப்ரிசியோ ஆல்வாரேடோ (வயது 43) போட்டியிட்டார். இந்த தேர்தலில் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகளை பெற்று கார்லோஸ் வெற்றி பெற்றார்.

கடந்த ஆட்சியில், தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரியாக கார்லோஸ் இருந்துள்ளார். இதழியல் மற்றும் அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றுள்ளார். ராக் அண்ட் ரோல் இசை குழு ஒன்றில் பாடலும் பாடியுள்ளார்.

அவர் 3 நாவல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் 2ம் உலக போரில் கோஸ்டாரிகாவில் உள்ள ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டு சொத்துகளை முடக்கம் செய்தது பற்றிய வரலாற்று நிகழ்வுகளை கொண்ட லாஸ் பொசசியன்ஸ் (தி பொசெசன்ஸ்) என்ற புத்தகமும் ஒன்று ஆகும்.

தேசிய ஒற்றுமைக்கான அரசில் மற்ற கட்சிகளும் தன்னுடன் வந்து இணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.