கீவ்,
சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கனவில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், மனித குல வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக பதிவாகி வருகிறது.
ரஷியாவின் ரகசியக்கனவு
2014-ம் ஆண்டு, உக்ரைனின் பகுதியாக திகழ்ந்த கிரிமியா தீபகற்பத்தை இணைத்து தனதாக்கிக்கொண்ட ரஷியா, உக்ரைன் மீதும் ரகசிய கனவு வளர்த்தது. மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்குவதற்கு இது அடிப்படையாக அமையும் என்பது அதிபர் புதினின் மனக்கணக்கு ஆகும்.
இதில் இருந்து தப்பிக்க என்றைக்கு பாதுகாப்பு தேடி நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியதோ, அன்றைக்கே அது தனக்கான ஆபத்து வளையம் என்று உணர்ந்த ரஷியா அதிரடி நடவடிக்கைகளை ஓசைப்படாமல் மேற்கொண்டது.
அதன் அடுத்தடுத்து விளைவுதான் உக்ரைன் எல்லையில் படைகள், தளவாடங்கள் குவிப்பு, பெலாரசில் போர்ப்பயிற்சி என நீண்டது. கடைசியாய் உக்ரைன் மீது போர் என்ற உச்சக்கட்டம் நேற்று முன்தினம் அரங்கேறி இருக்கிறது.
முதல் நாளில் பெரும்சேதம்
நேற்று முன்தினம் உக்ரைன் மீதான போரை அதிபர் புதின் அறிவித்த சில நிமிடங்களில், இதற்காகத்தானே காத்திருந்தோம் என்று சொல்கிற விதத்தில் அந்த நாட்டின் மீதான ஆவேச தாக்குதலை ரஷிய படைகள் முழுவீச்சில் தொடங்கி விட்டன.
ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மறுபக்கம் குண்டுமழையும் பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் முதல்நாள் போரிலேயே உருக்குலைந்து போயின.
முதல் நாள் போரில் நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ள ரஷிய படைகள், உக்ரைனின் ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கிடங்குகள், கட்டடளை மையங்கள் என சுமார் 75 ராணுவ சொத்துக்களை நிர்மூலமாக்கின.
இருப்பினும், உக்ரைனின் 118 ராணுவ தளங்களை அழித்ததாகவும், 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்தது. மேலும், 1 ஹெலிகாப்டர், 5 ஆளில்லா விமானங்கள், 18 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், 7 ராக்கெட் லாஞ்சர்கள், 41 சிறப்பு ராணுவ வாகனங்கள், 5 போர் படகுகள் அழிக்கப்பட்டதாகவும் ரஷியா புள்ளிவிவரம் சொல்கிறது.
2-வது நாள் தாக்குதல்
இரண்டாவது நாளான நேற்று பொழுது விடிவதற்கு முன்பாகவே ரஷிய படைகள் தங்கள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை கிழக்கில் இருந்தும், வடக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் தொடங்கின.
இது உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரை குறிவைக்கும் ரஷியாவின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பேசிய அந்த நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, கீவ் நகரை தங்கள் முன் மண்டியிடச் செய்ய வேண்டும் என்று எதிரிகள் முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பது போலரஷியப்படைகள் குண்டுகளை தொடர்ந்து வெடித்தவண்ணம் இருந்தன.
தீவுக்காக வீர மரணம்
200 ஹெலிகாப்டர்களையும், ஒரு தரையிறங்கும்படையையும் பயன்படுத்தி ஆன்டனோவ் விமான நிலையத்தை ரஷியா கைப்பற்றியது.
கருங்கடலில் உள்ள சினேக் தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த 13 உக்ரைன் படைவீரர்களை ரஷிய படையினர் சரண் அடையச் சொன்னபோது அவர்கள் மறுத்து விட்டதால் கொல்லப்பட்டனர்.
சினேக் தீவை கைவிட மறுத்து, நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மனதார பாராட்டினார்.
குடியிருப்புகள் மீது ஏவுகணைவீச்சு
ரஷிய படைகள் முன்னேறுவதைத் தடுக்க கீவ் நகரின் அரண்கள் வெறித்தனமாக தோண்டப்பட்டன. ஆனாலும் மற்றொரு பக்கம் கவச வாகனங்கள் நகருக்குள் முன்னேறும் வீடியோக்கள் வெளியாகின.
கீவ் நகரின் வடமேற்கில் அமைந்துள்ள புச்சாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து ரஷியப்படைகள் ஏவுகணைகளை சரமாரியாக வீசின.
தலைநகரில் ரஷிய படைகள்
ரஷிய படைகள் கீவ் நகருக்குள் நேற்று நுழைந்தன. அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்பு சத்தம் அங்கு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு துப்பாக்கிச்சண்டையும் நடந்திருக்கிறது. ரஷிய படைகள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கீவ் நகரின் ரிவ்னே பகுதியில் வான் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. அனைத்து ரஷிய படைகளும் அதிபர் மாளிகையை நோக்கி செல்வதாக சொல்லப்படுகிறது.
தலைநகர் கீவின் வடக்கு மாவட்டங்களுக்குள்ளும் ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. கீவ் நகரத்தை ரஷிய படைகள் சுற்றிவளைத்து விட்டதால் சில நாட்களிலேயே ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் அந்நகரம் வந்து விடும் என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது.
தலைநகரில் இன்றில் இருந்து போர் உக்கிரம் அடையும் என்பதால் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஏறத்தாழ 7 ஆயிரம் பேருடன் சிறப்பு ரெயில் ஒன்று, கீவ் நகரில் இருந்து மேற்கத்திய நகரை நோக்கி பயணமானது.
பலி எவ்வளவு?
ரஷியாவின் வான்தாக்குதலில் 25 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற புள்ளி விவரத்தை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. ஆனால் 137 பொதுமக்கள் பலியானதாக உக்ரைன் கூறுகிறது.
ரஷிய படைகளுக்கு ஈடுகொடுத்து உக்ரைன் படைகளும் சண்டையிட்டு ரஷிய படையினர் 450 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ராணுவ மந்திரி பென் வாலஸ் தெரிவித்தார்.
இதுவரையிலான போரில் 1,000 ரஷிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் சொல்கிறது.
கீவ் நகருக்கு அருகே உள்ள ஹாஸ்டமெல் விமான நிலையத்தை பிடித்தபோது, நடந்த சண்டையில் மட்டுமே உக்ரைன் படை வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என்று ரஷியா கூறுகிறது.
மொத்தத்தில் நேற்று நடைபெற்ற சண்டையில் மட்டுமே இரு தரப்பிலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக பல்வேறு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
போரில் பொதுமக்கள்
உக்ரைனில் உக்ரைனிய தற்காப்புப்படை வயது வித்தியாசமின்றி பொதுமக்களை சண்டையில் ஈடுபடுத்த அழைப்பு விடுத்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் போரில் ஈடுபடுத்த உக்ரைன் ராணுவம் எண்ணி உள்ளது. ரிசர்வ் படையினருக்கு 18 ஆயிரம் துப்பாக்கிகளை உக்ரைன் வழங்கி உள்ளது.
கீவ் நகர வீதிகளில் நாட்டை பாதுகாப்பதற்கு உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களை ஏந்தியிருப்பதை பார்த்ததாக பி.பி.சி. நிருபர் தெரிவித்தார்.
இன்று உக்ரைன் தலைநகரான கீவ் நகரை உருக்குலையச்செய்யும் முயற்சியில் ரஷியப்படைகள் முழுவீச்சில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.