கீவ்,
உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் மீது 6-வது நாளாக குண்டு மழை பொழிந்துவரும் ரஷியா, உக்ரைனின் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கிவிட்டது.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4 மத்திய மந்திரிகள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிகம் பேரை மீட்க முடியும் என்பதால் விமானப்படையை ஈடுபடுத்த பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-14 ரக போர் விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப் பட இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.