இஸ்லமபாத்,
பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் விவகாரத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் நவாஸ் ஷெரீப் பதவி விலகினார். அவர் மீதான ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பனமா கேட் மோசடி தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக 3 வழக்குகளை தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 3-வழக்குகளிலும் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள 3 வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பொறுப்புடமை நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் இன்று ஆஜராகி இருந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நவாஸ் ஷெரீப், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் வரலாற்றில் கருப்பு தினமாகும். இந்த தீர்ப்பு பழிவாங்கும் வகையிலும் வன்மத்தின் அடிப்படையிலும் அளிக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.
நவாஸ் ஷெரீப் நீதிமன்றம் வருகை தந்ததையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.