உலக செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்த, சியாச்சின் பனிமலை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திடீர் ஒத்திகை

சியாச்சின் பனிமலை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டன. பாகிஸ்தான் விமானப்படை தளபதி முன்னிலையில் நடந்த இந்த ஒத்திகை இந்தியாவை அச்சுறுத்த நடத்தப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்

ராணுவம் அதிரடி

காஷ்மீரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க 2 வாரங்களுக்கு முன்பு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அப்பால் பீரங்கி ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டு லாஞ்சர்கள், அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள் மூலம் இந்திய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது.

இதில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் மற்றும் பல கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து இதுவரை எதுவும் தெரிய வரவில்லை.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் டெல்லியில் வெளியிட்டனர். இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்திய காட்சிகளை வெளியிட்டது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போர் ஒத்திகை

இதனால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் சியாச்சின் பனிமலை பகுதியில் நேற்று தனது போர் விமான ஒத்திகையை நடத்தியது.

இமயமலையின் கிழக்கு காரகோரம் பகுதியில் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை பிரதேசம் உள்ளது. இங்குதான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி முடிவடைகிறது. இதனால் இரு நாடுகளின் ராணுவமும் இங்கு பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளது.

பதற்றம் நிறைந்த இந்த பகுதியில்தான் மிராஜ் ரக போர் விமானம் ஒன்றில் பாகிஸ்தான் விமானப்படை தளபதி சோகைல் அமான் நேற்று திடீரென பயணம் மேற்கொண்டார். அவர் பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளத்துக்கும் சென்றார்.

பதிலடி தரப்படும்

அங்கு போர் விமான பைலட்டுகள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார்.

அப்போது போர் விமான படைப்பிரிவினர் மிராஜ் ரக போர் விமானங்களை மிக அதிக உயரத்துக்கும், மிக தாழ்வாகவும் அமான் முன்பாக இயக்கி போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சோகைல் அமான், எதிரியின் (இந்தியா) அறிக்கைகளால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அதே நேரம் எல்லைகட்டுப்பாட்டு கோடு பகுதியில் எதிரி அத்துமீறி நடந்தால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். அது அவர்களின் எதிர்கால சந்ததியினர் நினைவில் கொள்ளும் அளவிற்கு இருக்கும் என்று கொக்கரித்தார்.

இந்தியா மறுப்பு

இதுபற்றி பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலான சமா கூறுகையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள முன்னணி விமான தளங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும் வகையில் போர் விமானங்கள் பறந்தன. போர் ஒத்திகையின் ஒரு பகுதியாக இந்த விமான அணிவகுப்பு நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் பறந்ததாகவும் தகவல் வெளியானது.

இதை டெல்லியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் மறுத்தனர். அவர்கள் கூறும்போது, பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி இந்திய வான் எல்லைக்குள் பறக்கவில்லை என்றனர்.

பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் நேற்று 87 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அப்பால் காஷ்மீரின் நஷ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த பதில் தாக்குதலில், இந்திய ராணுவ நிலைகள் பல கடும் சேதம் அடைந்ததாகவும், இந்தியாவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் காபூர் கூறினார்.

இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவுக்கு போட்டியாக இதை பாகிஸ்தான் வெளியிட்டு இருக்கிறது.