வாஷிங்டன்,
அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அங்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி இருக்கிறார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் விடுத்துள்ள அறிக்கை:-
ஏறத்தாழ 75 ஆண்டுகளாக பரந்த பரஸ்பர நலன்களில் பாகிஸ்தான் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுடனான உறவை நாங்கள் மதிக்கிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை அமெரிக்கா வாழ்த்துகிறது. பாகிஸ்தான் அரசுடன் எங்களுடைய நீண்ட கால ஒத்துழைப்பைத் தொடர எதிர்பார்க்கிறோம். வலுவான, வளமான, ஜனநாயக பாகிஸ்தானை இரு நாடுகளின் நலன்களுக்கும் இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது.
இவ்வாறு அதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறி உள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சம்பிரதாயப்படி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இம்ரான்கானுடனும் அவர் பதவி இழக்கும் வரையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒருமுறை கூட தொலைபேசியில் அழைத்து பேசவில்லை.