உலக செய்திகள்

லாகூரில் இம்ரான்கான் பங்களாவுக்குள் 10 ஆயிரம் போலீஸ் நுழைந்து அதிரடி

லாகூரில் இம்ரான்கான் பங்களாவுக்குள் 10 ஆயிரம் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.

தினத்தந்தி

இம்ரான்மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கிரிக்கெட் நட்சத்திரமாக மின்னி, அரசியலில் குதித்து பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்கி, 2018-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தவர், இம்ரான்கான் (வயது 70). ஆனால் நான்கே ஆண்டில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி பறித்தன. அவர் பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டுத்தலைவர்கள் அளித்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானாவிடம் இருந்து மலிவு விலைக்கு வாங்கி, கொள்ளை விலைக்கு சட்டவிரோதமாக விற்று பெரும் லாபம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கைது செய்ய....

இதையொட்டிய வழக்கு, இஸ்லாமாபாத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகாமல் இம்ரான்கான் தொடர்ந்து 'டிமிக்கி' கொடுத்து வந்ததால், கோர்ட்டு அவருக்கு எதிராக அதிரடியாக பிடிவாரண்டு பிறப்பித்தது. மேலும் பெண் நீதிபதிக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இவ்விரு வழக்குகளிலும் அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் லாகூரில் உள்ள அவருடைய பங்களாவுக்கு போலீஸ் படை சென்றபோது, அரண்போல நின்ற இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், போலீஸ் படைக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது.

கோர்ட்டில் ஆஜராக....

இதற்கிடையே நேற்று இம்ரான்கான் இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராவதற்கு புறப்பட்டுச்செல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த நேரத்தில் லாகூர் ஜமான் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அவரது பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் படையெடுத்து, தடுப்புவேலிகளை உடைத்தெறிந்து, முற்றுகையிட்டனர். பங்களாவினுள் நுழைந்து டஜன் கணக்கிலான அவரது ஆதரவாளர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். அப்போது இம்ரான்கான் மனைவி புஷ்ரா பீவி வீட்டில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பிடிவாரண்டு ரத்து

இதற்கிடையே இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜப்பார் இக்பால், இம்ரான் கானின் வருகையை பதிவு செய்ததுடன், அவர் மீதான பிடிவாரண்டுகளை ரத்து செய்தார். இம்ரான்கான் 30-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக அவர் உத்தரவிட்டார்.

இம்ரான்கான் வருகையால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. அங்கு போலீசாரும், இம்ரான்கான் ஆதரவாளர்களும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டினர். அங்கு கோர்ட்டு பகுதியே போர்க்களம் போல காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு