இஸ்லமாபாத்,
இந்திய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக எல்லை மீறி தாக்குதல் நடத்துவதாக இந்திய துணை உயர் ஆணையர் ஜெ பி சிங்கிற்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அளித்துள்ளது. தெற்கு ஆசியா மற்றும் சார்க்கின் பொது இயக்குனர் முகமது பைசல், மார்ச் 1 ஆம் தேதி பிம்பெர் மற்றும் சமஹினி பகுதிகளில் இந்திய ராணுவம் எல்லை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக கண்டனம் தெரிவித்து ஜெ பி சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும், இந்திய ராணுவம் கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்திய ராணுவம் இதுவரை 415க்கும் அதிகபடியாக எல்லை மீறியத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் 20 பொது மக்கள் பலியாகியுள்ளனர். 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1970 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இல்லாத அளவிற்கு இந்திய ராணுவம் தற்போது எல்லைத்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை குறி வைத்தே ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனக் கூறினார்.
எல்லை மீறிய தாக்குதல்களை கைவிடவும், எல்லைப்பகுதிகளில் அமைதி நிலவவும் கடந்த 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.