கொழும்பு,
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா, நான்கு நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே அழைப்பின் பேரில், பாஜ்வா இலங்கைக்கு சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இலங்கை சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி இலங்கையின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்தார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பாதுகாப்புத்துறை மந்திரி, கடற்படை தளபதி உள்ளிட்டோரையும் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ நலன் குறித்தும் இலங்கை ராணுவ தளபதியுடன் பாஜ்வா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்த ஆலோசனை பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.