பஞ்சாப்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குருத்வாரா பஞ்சா சாகிப் என்ற மத தலம் உள்ளது. ராவல்பிண்டி அருகே உள்ள ஹசன் அப்தால் நகரில் உள்ள இந்த தலத்திற்கு செல்ல பாகிஸ்தானுக்கான இந்திய தூதரான அஜய் பிசாரியாவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
முன்கூட்டியே, உரிய அனுமதி பெற்ற பின்னரும், இந்திய தூதரை அனுமதிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தை இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எடுத்துச்சென்றுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், இதுபோல சம்பவம் இது இரண்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் மாதம், குருத்வாராவுக்கு செல்லவும் அங்கு வந்திருந்த புனித பயணிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
சீக்கிய புனித பயணிகளை சந்திக்க இந்திய தூதரக அதிகரிகளுக்கு, பாகிஸ்தான் அனுமதி மறுத்த சம்பவத்திற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவாக பேசி மூளைச்சலவை செய்யும் சில அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்காக இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பதாக இந்தியா அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர்.