இஸ்லமாபாத்,
ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் நேற்று ஒரு நிருபர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில், தனிநபர் முக்கியமா? அல்லது தேசத்தின் நலன் முக்கியமா? என்பது பற்றி அரசு முடிவு செய்யும் என்றார். இதன்மூலம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இதுவரை தெரிவித்து வரும் எதிர்ப்பை பாகிஸ்தான் கைவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மசூத் அசார் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து, டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், அந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிய புலனாய்வுத்துறை முயற்சித்து வருவதாக கூறினார்.