உலக செய்திகள்

அமெரிக்காவின் தோல்விகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பாகாது - கவாஜா ஆசிப்

அமெரிக்காவின் தோல்விகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பாகாது என அந்நாட்டு மந்திரி கவாஜா ஆசிப் கூறிஉள்ளார்.

இஸ்லாமாபாத்,

அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்லாயிரம் கோடி கணிக்கில் நிதிஉதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது.

இதில் மாற்றம் வேண்டும். அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது. தலீபான் மற்றும் இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை நாம் வெறுமனே இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என கடும் எச்சரிக்கையை விடுத்தார். கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகி உள்ளது.

பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தன்னுடைய புதிய கொள்கையை அறிவித்து உள்ளநிலையில் பாகிஸ்தான் அமெரிக்கா மீதும் குற்றம் சாட்டி வருகிறது.

இப்போது அமெரிக்காவின் கொள்கை தோல்விகளுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

அமெரிக்கா புதிய கொள்கையை அறிவித்த பின்னர் பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார். அமெரிக்காவின் கொள்கை தோல்விகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பு ஆக முடியாது என அமெரிக்காவிடம் தொரிவித்துவிட்டோம், நாங்கள் பலிகடா ஆக முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம் என பாகிஸ்தான் செனட்சபை குழுவிடம் ஆசிப் கூறிஉள்ளார். பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சவுதி உள்பட 4 நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடருமாறு இந்த நாடுகள் கேட்டுக் கொண்டு உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.