உலக செய்திகள்

‘காஷ்மீர் நேரம்’ கடைப்பிடித்து காஷ்மீர் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது, பாகிஸ்தான்

‘காஷ்மீர் நேரம்’ கடைப்பிடித்து காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை பலவீனப்படுத்தி விட்டது. இதனால் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான இந்த நடவடிக்கையை, சர்வதேச பிரச்சினை ஆக்க தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கிற வகையில் பாகிஸ்தான் நேற்று நண்பகல் 12 மணிக்கு காஷ்மீர் நேரம் என அறிவித்து, கடைப்பிடித்தது.

அப்போது நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்தன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு நிறம் ஒளிர்ந்தது.

இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் சாசன அவினியூவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசியதாவது:-

நமது காஷ்மீர் மக்கள் கடினமான கட்டத்தை கடந்து செல்கின்றனர். ஏறத்தாழ 80 லட்சம் காஷ்மீர் மக்கள் கடந்த 4 வாரங்களாக ஊரடங்கின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாம் காஷ்மீர் நேரம் கடைப்பிடிப்பதின் நோக்கம், காஷ்மீர் மக்களுடன் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற செய்தியை பாகிஸ்தானில் இருந்து விடுப்பதற்குத்தான். நாம் நமது கடைசி மூச்சு வரை அந்த மக்களுடன் இணைந்து நிற்போம். இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.