இஸ்லாமாபாத்,
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆரிஃப் ஆல்வி, கடந்த 5 நாட்களாக தனக்கு தொண்டை வலி இருந்ததாகவும், 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வேறு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பரிசோதனையின் போது தனக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.