உலக செய்திகள்

டிரம்ப்பின் அமைதி வாரிய கூட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை எழுந்து நிற்கும்படி பேச்சின் இடையே டிரம்ப் கேட்டு கொண்டார்.

வாஷிங்டன் டி.சி.

காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் நடத்தினார். அப்போது அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் (1 பில்லியன் என்பது 100 கோடி) அமெரிக்க டாலர் செலவிடப்படும் என்றார். ஐ.நா. சபையுடன் நெருங்கி பணியாற்ற போகிறோம். நாங்கள் அவர்களை திரும்ப அழைத்து வர இருக்கிறோம்.

ஒரு நாள் நான் இல்லையென்றாலும் கூட, ஐ.நா. சபை மிகவும் வலுவாக இருக்கும் என நினைக்கிறேன். ஐ.நா. சபையை அமைதி வாரியம் நன்றாக கண்காணிப்பதுடன், அதன் செயல்பாடுகளையும் உறுதி செய்ய போகிறது என்றும் அவர் அப்போது கூறினார்.

இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர் குழு புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு மத்திய பகுதியில் இடம் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. டிரம்ப் புகைப்படத்திற்கு வசதியாக மையத்தில் நின்று கொண்டார்.

அவரருகே, துணை ஜனாதிபதி வான்ஸ், வெளியுறவு மந்திரி ரூபியோ ஆகியோர் நின்றனர். டிரம்ப்பின் பின்னால் சவுதி அரேபியா, இந்தோனேசியா மற்றும் கத்தார் நாடுகளின் தலைவர்கள் நின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமரோ ஓரத்தில் நின்றார்.

இதேபோன்று, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதி ஏற்படுத்தினேன் என தன்னை பற்றி பெருமையாக டிரம்ப் பேசும்போது, இடையே பேச்சை நிறுத்தி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை எழுந்து நிற்கும்படி டிரம்ப் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து டிரம்ப், நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் ஆச்சரியப்பட்டார். தற்போது எங்களை அவர் கவனித்து வருகிறார் என்று பேசினார். எனினும் அதற்கு முன்பு, இந்த நபரை நான் விரும்புகிறேன் என ஷெரீப்பை பற்றி உயர்வாக கூறினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை சிறந்த மனிதர் என்றும் டிரம்ப் கூறினார்.