இஸ்லாமாபாத்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையால், இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபம் அடைந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தினமும் அந்நாட்டுத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதன் காரணமாக
இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், நேசபிர் மற்றும் பாக்சர் செக்டார்களில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இந்திய ராணுவம் குறிவைத்து தானியங்கி இயந்திரங்கள், மோர்டார்கள் மூலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்தியாவின் அத்துமீறிய தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.