இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுத்தேர்தலில், தற்போதைய பிரதமர் இம்ரான்கான் உள்பட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் தலா ஒரு தொகுதியை வைத்துவிட்டு பிற தொகுதிகளில் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் 11 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 24 சட்டசபை தொகுதிகள் காலியாகின. இந்த 35 தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பி.டி.ஐ. கட்சி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.
எனினும் பல தொகுதிகளை அந்த கட்சி இழந்திருந்தது. குறிப்பாக 11 நாடாளுமன்ற தொகுதிகளில் வெறும் 4-ஐ மட்டுமே அந்த கட்சியால் மீண்டும் பெற முடிந்தது. இதில் இம்ரான்கான் ராஜினாமா செய்த 2 தொகுதிகளை கூட அந்த கட்சி இழந்தது. இதைப்போல 24 எம்.எல்.ஏ தொகுதிகளில் 11 இடங்களை மட்டுமே பி.டி.ஐ. கட்சி பெற்றது.
அதேநேரம் எதிர்க்கட்சிகள் குறிப்பாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி எழுச்சி பெற்றுள்ளது. அந்த கட்சி 4 நாடாளுமன்ற தொகுதிகளையும், 7 எம்.எல்.ஏ. தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த முடிவுகளால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், எதிர்க்கட்சிகளுக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.