குயெட்டா,
பாகிஸ்தானில் குயெட்டா நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள திகாரி என்ற இடத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டியெடுக்கிற பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்தை வெட்டியபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து நேரிட்டது. தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கி மரண ஓலமிட்டனர். இடிபாடுகளில் சிக்கி அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
நிலக்கரி தொழிலாளர் சங்க தலைவர் முகமது இக்பால் யூசுப்சாய் கூறும்போது, வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் தொழிலாளர்களை நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த சுரங்கம் சுராப்ஜி நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமானது என குறிப்பிட்டார்.
நிலக்கரி சுரங்கத்தினுள் மீத்தேன் வாயு வெளிப்பட்டதால்தான் வெடி விபத்து நேரிட்டதாக சுரங்கத்துறை தலைமை இன்ஸ்பெக்டர் சப்கத் பயாஸ் கூறினார்.