உலக செய்திகள்

டிரம்ப்பை கொல்ல சதித்திட்டம் - அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர் வாக்குமூலம்

கொலையை செய்து முடிப்பதற்காக அடியாட்களை தேடும் முயற்சியில் ஆசிப் ரஸா ஈடுபட்டுள்ளார்.

வாஷிங்டன்,

ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதியாக இருந்த காசிம் சுலைமானி, கடந்த 2020-ம் ஆண்டு பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் அதிகாரிகள் பலமுறை சபதம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி, அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தப்ப முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் ரஸா மெர்சண்ட் என்பவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கோர்ட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின்போது, ஆசிப் ரஸா அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிப் ரஸாவின் குடும்பத்தினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வருவதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையினர் அவரது குடும்பத்தினரை கடத்தி வைத்துக் கொண்டு, அமெரிக்காவின் முக்கிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே ஆகிய மூவரில் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஆசிப் ரஸா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையை செய்து முடிப்பதற்காக அடியாட்களை தேடும் முயற்சியில் ஆசிப் ரஸா ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஆசிப் ரஸா தனது வாக்குமூலத்தில், தான் யாரையும் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை எனவும், கொலை செய்ய முயற்சிக்கும்போது பிடிபட்டுவிடுவோம் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார். அவர் மீது சர்வதேச பயங்கரவாதம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமெரிக்க கோர்ட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய நபர் மீதான வழக்கு விசாரணை தற்போது கவனம் பெற்றுள்ளது.